மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிவு – நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிந்தது.
மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது.
மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. அணை கட்டப்பட்டபோது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர். அணை நீர்மட்டம் குறையும் போது, காவிரி கரையோரப் பகுதியில் மக்கள் விவசாயம் செய்கின்றனர். அப்போது, நந்தி சிலை, கிறிஸ்தவ ஆலய கோபுரம் வெளியே தெரியும்.
இந்நிலையில், அணையிலிருந்து கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து ஏற்ற, இறக்கத்தில் உள்ளது. அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 131 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 299 கனஅடி, மாலை 4 மணி நிலவரப்படி 723 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை முதல், டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் 58.66 அடியாகவும் நீர்இருப்பு 23.69 டிஎம்சியாகவும் இருந்தது.
அதன்படி, கடந்த ஜூலை 12-ம் தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்துக்கு மேலே தெரியத் தொடங்கியது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 22-ம் தேதி 70 அடிக்கும் கீழ் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்துக்கு மேலே தெரியத் தொடங்கியது.
இந்நிலையில், தற்போது, அணையின் நீர்மட்டம் 59 அடிக்கு கீழ் சரிந்த நிலையில், நந்தி சிலை முழுமையாக தெரியத் தொடங்கியுள்ளது. இதற்கு முன்னர் 2019-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி அணையின் நீர்மட்டம் 59 அடிக்கு கீழ் சரிந்தது குறிப்பிடத்தக்கது. நந்தி சிலையைக் காண வார விடுமுறையான நேற்று பண்ணவாடிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். தூரத்தில் இருந்தே நந்தி சிலையை பார்த்து ரசித்தனர். பின்னர் பண்ணவாடி பரிசலில் மீன் வாங்கி சாப்பிட்டனர்.
Post a Comment